Tag Archives: Dinamani

கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா

Published on : 07th May 2017 08:47 AM  

கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மல்லியகரையை அடுத்த கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மதுரை,திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, கூடமலை, கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இதே போல திருச்சி, மதுரை, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 550 பேர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுகளில் தங்கக் காசு, தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண்கயிறு, பட்டுவேட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களை கட்டியிருந்தனர். அதே போல் மாடுபிடிவீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
மேலும், ஜல்லிக்கட்டு விழாவையொட்டி ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் தலைமையில் மல்லியகரை காவல் ஆய்வாளர் (பொ) தட்சிணாமூர்த்தி, ஆத்தூர் காவல் ஆய்வாளர் கேசவன், தலைவாசல் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த செய்தி தினமணி இனைதளத்தில் இருந்து.

புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு; 15 பேர் காயம்

Published on : 17th May 2017 06:19 AM    

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க முயன்ற 15 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.

புள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள குளுந்தாளம்மன் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டுப் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தானின் 10 காளைகள் மற்றும்  அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டியபோதும், வாடிவாசல் வழியே வந்த பெரும்பான்மையான காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறி பாய்ந்து சென்றன. 15 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயமேற்பட்டது. இவர்களுக்கு அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டு உரிய விதிகளின்படி நடைபெறுகிறதா என லால்குடி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, வட்டாட்சியர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் பார்வையிட்டனர்.லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பேட்ரிக்  தலைமையில் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காளைகளை அடக்கிய சிறந்த வீரர்களுக்கும், வீரர்களிடம் அகப்படாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், வெள்ளிக்காசுகள், சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விழா குழுவினர் பரிசாக வழங்கினர்.

இந்த செய்தி தினமணி இனையதளத்தில் இருந்து.