மல்லுக்கட்டு இன்றி நடக்குமா ஜல்லிக்கட்டு – முட்டுக்கட்டை போட முயற்சிகள் மும்முரம்

மதுரை : தை பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் முட்டுக்கட்டை போட தீவிர முயற்சிகள் நடப்பதால் தடங்கலின்றி நடக்குமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு… தமிழகத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வீர விளையாட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, கிராம கோயில் திருவிழா, சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆடுகளத்தில் சீறிப்பாயும் முரட்டு காளையை அடக்கும் வீரர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப்படும்.

அடக்க முடியாவிட்டால், அஞ்சாத காளை என புகழ்ந்து அதற்கு பரிசளிக்கப்படும். தமிழர்களின் பாரம்பரியமான இந்த வீர விளையாட்டு கிராம கோயில் திருவிழா வழிபாட்டில் ஒன்றாக நம்பப்படுகிறது.தமிழகத்தில் 650க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகத்தையே கவர்ந்து இழுக்கும் சிறப்பு பெற்றது.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடக்க விடாமல் முடக்கி போடும் திட்டத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன் விலங்குகள் நல சங்கம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாகாந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அன்றைக்கு எழுந்த சோதனை இன்னும் முழுமையாக நீங்காமல் சோதனை மேல் சோதனையாக நீடிக்கிறது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்து 2009ல் தனி சட்டம் இயற்றியது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கடும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டது. இதன் பிறகு இந்தி நடிகை ஹேமமாலினி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென கொடி தூக்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனால் சர்க்கசில் புலி, சிங்கம், கரடிகளுக்கு தடை விதிக்கப்பட்டது போல் விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்து 2011ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு பெரும் தடங்கலை உண்டாக்கியது. இதை மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைத்தது.

ஆனால் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. இதன்பேரில் மாவட்ட கலெக்டர்கள் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்பட்டன. சில கலெக்டர்கள் 77 நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கினர். சில கலெக்டர்கள் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளும்படி நழுவினர்.கடந்தமுறை கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. சில ஊர்களில் கட்டுப்பாடுகள் மீறிய ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுகளில் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன. காளைகளும் சித்ரவதை செய்யப்பட் டதாகவும், விதிமீறல்கள் நடைபெற்றதாகவும் பிராணிகள் நல வாரியம் புகார் தெரிவித்து மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போட முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக, முந்தைய ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுகளில் பலியானோர், காளைகள் சித்ரவதை காட்சி வீடியோ, கட்டுப்பாடு மீறல் குறித்து பட்டியல் தயாரித்துள்ளது. மேனகா காந்தியும், ஹேமமாலினியும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர் கள் அஞ்சுகிறார்கள். காளையை விலங்குகள் பட்டியலில் சேர்த்து தடை விதித்த மத்திய அமைச்சரின் உத்தரவும் ரத்து செய்யப்படாமல் 2 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை ஒரு ஆயுதமாக கையில் தூக்கிக் கொண்டு மிரட்டுவதாக அஞ்சப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன் கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ல் மதுரை அவனியாபுரம், 15ல் மதுரை பாலமேடு, 16ல் உலகபுகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டு விட்டது.ஜல்லிக்கட்டுக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முரட்டு காளைகள் தயாராகி வருகின்றன. சத்துள்ள தீவனம், நீச்சல் பயிற்சி, தோட்டங்களில் மணல் மேட்டில் முட்டி மோதுதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுன்றன.

இதேபோல் காளையை அடக்க காளையர்களும் சிறப்பு பயிற்சி பெற்று ஜரூராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு 6 ஆண்டுகளாக ஏதாவது ஒரு சோதனை எழுந்து, தடங்கல் ஏற்படுவதும், கடைசி நேரத்தில் நீங்குவதுமான நிலையே நீடிக்கிறது. கடுமையான கட்டுப்பாடுகளால் 400க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு முற்றிலும் தடைபட்டு போனது. எனவே தற்போது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தடுத்து தடங்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

எது சித்ரவதை?
ஸ்பெயின், தென் அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் காளைகளுடன் சண்டையிட்டு அடக்கும் பந்தயங்கள் நடக்கின்றன. வட்ட வடிவமான அரங்கில் காளைகள் திறந்து விடப்படும். வீரர்கள் குதிரையில் அமர்ந்தபடி காளை மீது ஈட்டிகளை வீசி, அது தளர்ந்ததும், அதன் முகத்தின் முன் வண்ணத் துணிகளை காட்டியபடி வாளை பாய்ச்சி கொல்வார்கள். அது சித்ரவதை. ஜல்லிக்கட்டில் காளைகள் ஆடுகளத்தில் இறங்கியதும் ஓரிரு நிமிடங்களில் துள்ளி பாய்ந்தபடி ஓடிவிடும். அதற்குள் திமிலை பிடித்து அடக்க வேண்டும். அதோடு முடிந்தது.

மிரட்டும் ஹேமமாலினி
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தியை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலினி தூக்கிய கொடியை கீழே போடவில்லை. மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி தடுக்க முயற்சிப்பதாகவும், இதற்காக பிராணிகள் நல வாரியத்தில் இருந்து தகவல்களை கேட்டு பெற்றுள்ளதாகவும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) தொகுப்பில் 2013-12-23 அன்று வெளிவந்தது !

Leave a Reply