
கால்நடைகளை வளர்ப்பு பிராணிகளாக எண்ணாமல் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே பாவித்து வளர்ப்பது தமிழகத்தில் மரபு. அதிலும் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் என்றால் அதற்கென்று தனி அக்கறை உண்டு. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையையும் தயார்படுத்துகின்றனர்.
இதோ பொங்கல் வரப்போகிறது. அதையொட்டி ஜல்லிக் கட்டுப் போட்டிகளும் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் திருச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் சூழலில், திருச்சி நவலூர் குட்டப்பட்டுவை அடுத்துள்ள பாகனுரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யேக பயிற்சிகளை அளித்து தீவிரமாக தயார் செய்து வருகின்றனர்.

காளைகளுக்கும் தங்களுக்குமான பாசப்பிணைப்பை டோமினிக் என்பவர் கூறுகையில், சிறுவயது முதலே காளை வளர்ப்பில் எனக்கு மிகவும் ஈடுபாடு. நகரங்களில் நாய், புறா போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதை போல நாங்கள் காளைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். அவற்றை பிராணிகளாக இல்லாமல் எங்களுடன் பிறந்த சகோதரர் போலவே பாவித்து வளர்க்கிறோம். காளைகளும் நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் பின்னேயே அன்புடன் வரும் என்கிறார் இந்த இளம் காளை வளர்ப்பு பிரியர்.
ஜல்லிக்கட்டுக்கவே பிரத்யேகமாக வளர்க்கப்படும் காளைகளுக்கு தினமும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கின்றனர். காளையை அடக்குவோர் மிரள வேண்டும் என்பதற்காக, கொம்புகளை கூராக, வலுவாக தயார்படுத்த, காளையை மண் மேடுகளை முட்டி கீறி, சிதறவிடச் செய்து பயிற்சி அளிக்கின்றனர்.
மேலும் காளைகளின் உடல் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கமாக உண்ணும் வைக்கோல், அரிசி தவிடு ஆகியவற்றை தவிர்த்து அவற்றிற்கு பதிலாக போட்டிகளில் பங்கேற்கும் காலங்கள் பேரிச்சம்பழம், பருத்திவிதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் சத்தான பொருட்களை அன்றாடம் வழங்குகின்றனர்.

இது குறித்து தன் காளைகளுக்கு பயிற்சி அளித்து வரும் திருச்சியை அடுத்துள்ள பாகனூரை சேர்ந்த சேவை கூறுகையில், ” சிறு வயதில் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண செல்லும் போதே மனதிற்குள் காளை வளர்க்க வேண்டும் எனும் எண்ணம் வந்தது. அதற்காகவே இந்த காளையை வளர்த்து வருகிறேன். எனது காளையை திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் இட்டுச்செல்வேன். அந்த போட்டிகளில் எல்லாம் என் காளை பல பரிசுகளை வென்றுள்ளது”, என்கிறார்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசு அதிகாரிகளும், விழாக் கமிட்டியினரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை வேகமாக முன்னெடுத்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டில் தங்களது காளைகள் பெருமையை நிலைநாட்டி, பரிசுகளை குவிக்க வேண்டும் என்பதற்காக மும்முரமாக பயிற்சிகளை அளித்து உற்சாகத்துடன் தயார்படுத்தி வருகின்றனர். தாங்கள் வளர்த்த காளைகள் களத்தில் இறங்கி விளையாட உள்ளதை காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் காளைப்பிரியர்கள்.
இந்த கட்டுரை பி.பி.சி. தமிழ் இணையதளத்தில் வெளியானது. இதன் ஒரிஜினலை இங்கே படிக்கலாம்: https://www.bbc.com/tamil/india-46760283