மதுரையில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் ஜூன் 7–ந்தேதி சரத்குமார் தலைமையில் போராட்டம்

பதிவு செய்த நாள் : May 15 | 01:15 am

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து மதுரையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் ஜூன் 7–ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜல்லிக்கட்டும், சங்க இலக்கியமும்

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு வீர விளையாட்டான ஜல்லிகட்டு நிகழ்ச்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்துள்ளது, தீராதவேதனையை நமக்கெல்லாம் தந்துள்ளது. ஜல்லிகட்டு “ஏறு தழுவுதல்’’ என்ற பெயரில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவருவதை சங்க இலக்கியங்கள் மூலம் நாம் உணரமுடிகிறது. விலங்கு நல விரும்பிகள் எந்தவகையில் இந்த வழக்கைநடத்துகிறார்கள் என்பது புரியாதபுதிர்தான்.

அன்றாடம் உணவிற்காக பல கோடி உயிரினங்கள் ஆடு,மாடு,கோழி, மீன் என்று கொன்றுகுவிக்கப்படுவதை நாம் அறிவோம். இத்தகைய சூழலில் உலகில் முதலில் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடிமக்களின் வீர விளையாட்டை தடை செய்வதில் ஆர்வம் காட்டுவது எந்தவகையில் நியாயம். இது தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான முயற்சியாகும். காளை மாடுகளை துன்புறுத்துவது என்ற கருத்தே தவறானது.

உண்ணாவிரத போராட்டம்

எங்கள் தாத்தா காளை வளர்த்து அந்தக் காளையை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கசெய்து வந்தார். பஞ்ச கல்யாணி என்ற அந்த காளை மாடு இறந்த பிறகு எங்கள் கிராமத்தில் அந்த மாட்டை அடக்கம் செய்த இடத்தில் இன்றும் வழிபட்டு வருகிறோம். விலங்குகளை துன்புறுத்துவதற்கு உதாரணங்கள் சொல்லவேண்டுமென்றால் இழுக்க முடியாத சுமைகளை இழுத்து செல்வது, பாரம் சுமப்பது, மற்றதொழில்களுக்குபயன்படுத்தப்படுவது அனைத்துமே துன்புறுத்தல்களாக கருதப்படலாம் அவற்றையெல்லாம் தடைசெய்யமுடியுமா?.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு விதித்திருக்கும் தடையை நீக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்திடவேண்டும் என்பதோடு, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தொடர்ந்து நடத்திட அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்பதையும் வலியுறுத்தி மதுரையில் வருகிற ஜூன் மாதம் 7–ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எனது தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அமைதி வழியில், அறவழியில் நடத்திட முடிவுசெய்துள்ளோம்.

ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்

அரசியல் மற்றும் எந்த ஒரு பேதமுமின்றி அனைத்துதமிழ் நெஞ்சங்களும் பல்லாயிரக்கணக்கில் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுகிறேன். முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சினைகளில் சீரான, திறமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிவரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நிச்சயம் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

This news article has been reproduced from “Thina Thanthi” (Online edition) – dated  May 15, 2014.

2 thoughts on “மதுரையில், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் ஜூன் 7–ந்தேதி சரத்குமார் தலைமையில் போராட்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *